சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
14 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளப்பெரம்பூர்,
14 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஏஜெண்டு
தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது43). ஜவுளி கடைக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
சிறுமியின் குடும்ப வறுமை மற்றும் அவருடைய தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சூழலை பயன்படுத்தி பால்ராஜ், சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும், சிறுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
போலி சான்றிதழ்
திருமணத்தை தொடர்ந்து சிறுமியை மேட்டுப்பட்டிக்கு அழைத்து சென்ற பால்ராஜ் அவருடன் பலவந்தமாக உடலுறவு கொண்டதாக தெரிகிறது. திருமணம் நடந்த சில நாட்களில் சிறுமியின் தாய் இறந்தார். இதையடுத்து சிறுமி தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து சிறுமியை மீண்டும் மேட்டுப்பட்டிக்கு அழைத்து வந்த பால்ராஜ் அவரை சித்ரவதை செய்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமிக்கு 20 வயது பூர்த்தியாகி விட்டதாக கூறி போலி சான்றிதழ் வாங்கி பால்ராஜ் மோசடி செய்துள்ளார். அந்த சான்றிதழை வைத்து தஞ்சையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சிறுமியை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் மேட்டுப்பட்டியை சேர்ந்த சிலருடன் பால்ராஜுக்கு தகராறு ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
அவர்கள் கற்பழிக்க முயன்றதாக பொய் புகார் கொடுக்கும்படி சிறுமியை பால்ராஜ் மிரட்டி உள்ளார். அவ்வாறு சம்பவம் நடக்காத நிலையில் பொய் புகார் கொடுக்க சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ் நேற்று முன்தினம் இரவு சிறுமியை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடி வந்த சிறுமி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். சிறுமி அளித்த புகாரின்பேரில் நேற்று காலை போலீசார் பால்ராஜை வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
‘போக்சோ’ சட்டம்
இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் சிறுமியை அவர் படித்த அரசு பள்ளிக்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவருக்கு 14 வயதே ஆவது தெரியவந்தது. மேலும் பால்ராஜ், சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பால்ராஜ் மீது ‘போக்சோ’ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.