கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: கார் ஓட்டுனர் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் அதிகாரி தகவல்
கோவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கார் ஓட்டுனர் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணிகளை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பேரில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின.
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அலுவலக கேட் முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப அறிந்த பின்னர், சோப்பு கொண்டு கைகளை கழுவியபின்னரே பணி நிமித்தமாக வருபவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
கார் ஓட்டுனர் உரிமம் கிடையாது
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பினால் மக்கள் அதிக அளவில் கூட்டம் சேராமல் இருப்பதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு நாளுக்கு கியர் வண்டிக்கு 5 பேருக்கும், கியர் இல்லாத வண்டிக்கு 5 பேருக்கும் என 10 பேருக்கு மட்டுமே இனி ஓட்டுனர் உரிமம் அளிக்கப்படும்.
கார்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கார் ஓட்டுவதற்கு உரிமம் வாங்குபவர் அருகில் போக்குவரத்து அதிகாரிகள் உட்கார்ந்தால் சமூக இடைவெளி இருக்காது என்பதற்காக கார்களுக்கு ஓட்டுனர் உரிமம் தற்போது வழங்கப்படுவதில்லை.
பாதுகாப்புக்கு போலீஸ்
ஒரு நாளுக்கு பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) 10 பேருக்கும், பெயர் மாற்றம் உள்பட பல்வேறு பணிகளை செய்ய 10 பேருக்கும் என மொத்தம் ஒரு நாளுக்கு 30 பேருக்கு தான் அனுமதி வழங்கப்படுகிறது. ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க 10 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
புதிய வாகனங்களை வாகன ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வருபவர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதை வலியுறுத்துவதற்காக 2 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்வதற்காக கொண்டு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அவர்களின் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது புதிய வாகனங்களை பதிவு செய்வது மிகவும் குறைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.