மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக சாடிவயலில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம் மத்வராயபுரம் ஊராட்சி சார்பில் கட்டப்படுகிறது
மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக மத்வராயபுரம் ஊராட்சி சார்பில் சாடிவயலில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றால அருவி உள்ளது. இந்த அருவி இருக்கும் பகுதியின் அருகில் வெள்ளப்பதி, சீங்கப்பதி, சர்க்கார் போரத்தி, சாடிவயல் கல்கொத்திப்பதி, பொட்டப்பதி, ஜாகீர்போரத்தி ஆகிய மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமுதாயக்கூடம்
இந்த நிலையில் மத்வராயபுரம் ஊராட்சி சார்பில் சாடிவயல் பகுதியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 3 ஆயிரத்து 598 சதுர அடி பரப்பளவில் நவீனமாக இந்த சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கட்டுமான பணி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கட்டுமான பணி தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.50 லட்சம்
சாடிவயல் பகுதியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் மூலம் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம், மலைவாழ் மக்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும். இந்த சமுதாயக் கூடம் இந்த வருட இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இங்கு இந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் இலவசமாக நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். இது மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக மட்டுமே கட்டப்படுகிறது. எனவே மலைவாழ் மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை நடத்த வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.