மண்டபத்தில் கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடத்த அனுமதி - கலெக்டரிடம், மேடை அலங்கார தொழிலாளர்கள் மனு
மண்டபத்தில் கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மேடை அலங்கார தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறாவிட்டாலும், பல்வேறு அமைப்பினர் வந்து மனுக்களை கொடுத்தனர். நெல்லை மாவட்ட மேடை அலங்காரம் செய்வோர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், “கொரோனா ஊரடங்கால் திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெறாத சூழலில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எனவே திருமணங்களை பாதுகாப்புடனும், கட்டுப்பாட்டுடனும் திருமண மண்டபங்களில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இதன்மூலம் டெக்கரேட்டர்கள், ஒலி ஒளி அமைப்பாளர்கள், பந்தல், மேடை அமைப்பாளர்கள், சமையல் கலைஞர்கள், போட்டோ, வீடியோ கலைஞர்கள், கேட்டரிங் சர்வீஸ் தொழிலாளர்கள், பூ மாலை வியாபாரிகள், ஒப்பனை கலைஞர்கள், புரோகிதர்கள் என பல லட்சம் பேர் பயன் அடைவார்கள்“ என்று கூறப்பட்டு இருந்தது.
அழகு கலை நிபுணர்கள் அமைப்பை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் 2 மாதங்களாக 900 அழகு நிலையங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அழகு கலை தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்து தொழிலை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்“ என்று கூறி இருந்தனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பினர் கொடுத்த மனுவில், மத்திய அரசு மின்சார சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தம், மின்சார உற்பத்தி, வினியோகம், விலை நிர்ணயத்தை தனியார் மயமாக்குவதோடு, விவசாயிகள், நெசவாளர்கள், வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படும் சலுகை மின்சாரத்தை ஒழிக்கும் நோக்கம் உடையதாக உள்ளது. எனவே இதனை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன் கொடுத்த மனுவில், தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
நெல்லை சிறு தொழில் மற்றும் இரவு நேர வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில், நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, த.மு. ரோடு, எஸ்.என்.ஹைரோடு, டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதல் 12 மணி வரை நடைபாதை ஓரமாக இயங்கி வந்த உணவகங்கள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். எனவே எங்களது வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தும் வகையில் நிவாரணத்தொகை வழங்குவதுடன், மீண்டும் உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
பூர்வீக தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொரோனாவால் வேலையில்லாமல் உணவுக்கு வழியின்றி தவிக்கிறார்கள். அனைவருக்கும் நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கூறப்பட்டு இருந்தது. இதேபோல் முடி திருத்தும் தொழிலாளர்களும் கடைகளை திறக்க அனுமதி கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.