கம்மவான்பேட்டையில் இருந்து டெல்லிக்கு சென்றபோது இறந்தார்: காணொலிகாட்சி மூலம் நடத்தப்பட்ட ராணுவ வீரரின் தாய் இறுதிச்சடங்கு
டெல்லிக்கு சென்ற இடத்தில் இறந்த ராணுவவீரரின் தாய் உடலை ஊருக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கேயே இறுதிச்சடங்கு நடந்ததை காணொலி காட்சி மூலம் கம்மவான்பேட்டையில் உள்ள உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர்.
கண்ணமங்கலம்,
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள கம்மவான்பேட்டையில் வசித்தவர் ராஜேஸ்வரி (வயது 55). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது சொந்த ஊர் ஆரணி அருகே உள்ள அரியப்பாடி கிராமம் ஆகும். இவர்களது மகன்கள் முனிவேல் (35) டெல்லியிலும், பிரேம்சந்திரன் (32) மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை சிகிச்சைக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முனிவேல், டெல்லிக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி கடந்த 14-ந் தேதி இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து சிலிகுரியில் உள்ள பிரேம்சந்திரனும், லக்னோவில் ராணுவ பணியில் உள்ள ராஜேஸ்வரியின் தம்பி வேதகிரியும் கார் மூலம் டெல்லி சென்றனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக ராஜேஸ்வரியின் உடலை டெல்லியில் இருந்து கம்மவான்பேட்டைக்கு கொண்டு வர முடியவில்லை.
அதேபோன்று அரியப்பாடி, கம்மவான்பேட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தும் போக்குவரத்து முடங்கியிருந்ததால் யாராலும் டெல்லிக்கு செல்ல முடியவில்லை. இதனால் ராஜேஸ்வரியின் மகன்கள் முனிவேல், பிரேம்சந்திரன் ஆகிய இருவரும், தங்களது தாய்மாமன் வேதகிரி உதவியுடன் டெல்லியிலேயே ராஜேஸ்வரியின் உடலை தகனம் செய்தனர்.
ராஜேஸ்வரியின் உடலை பார்த்து அவரது மகன்கள் கதறி அழுதபடி இறுதிச்சடங்கு செய்தது ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ கால் மூலம் காணொலி காட்சியாக காண்பிக்கப்பட்டது. கம்மவான்பேட்டை, அரியப்பாடி பகுதியில் உள்ள உறவினர்கள் அதை பார்த்து இறுதிச்சடங்கு செய்தனர். இந்த சம்பவம் கம்மவான்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.