கொரோனா சமூக பரவலானதா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் ஆய்வு - 400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது

கொரோனா சமூக பரவலானதா? என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2020-05-17 22:15 GMT
திருவண்ணாமலை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் சமூக பரவலாக மாறுகிறதா? என்பதை கண்டறிய மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 27 மாநிலங்களில் 69 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. அந்த பட்டியலில் தமிழகத்தில் திருவண்ணாமலை, கோவை, சென்னை ஆகிய 3 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் தொடங்கிவிட்டதா? என்பதை கண்டறிய சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களை குழுக்கள் (ரேண்டம்) முறையில் தேர்வு செய்தனர்.

இதில் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சி, வாணாபுரம் அருகே உள்ள எடக்கல், போளூர் அருகே உள்ள புஷ்பகிரி, செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு, கலசபாக்கம் அருகே உள்ள மேல்பாலூர் உட்பட 6 கிராமங்களும், அதேபோல் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 4 கிராமங்கள் என மொத்தம் 10 கிராமங்களை தேர்வு செய்தனர்.

இந்த கிராமங்களுக்கு 2 டாக்டர்கள் உட்பட 10 பேர் கொண்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் நேரடியாக அந்த கிராமங்களுக்கு சென்று ஒரு கிராமத்தில் 40 பேர் என மொத்தம் 10 கிராமங்களில் 400 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலானதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 400 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள ஆய்வகத்தில் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, அதன் பின்னரே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்