அரக்கோணத்தில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயற்சி

அரக்கோணத்தில் பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மறியிலில் ஈடுபட முயன்றனர்.

Update: 2020-05-18 05:00 GMT
அரக்கோணம், 

அரக்கோணத்தை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த 14-ந் தேதி வீடு திரும்பினார். முன்னதாக அவர் வசித்த தெருவை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தெருக்களில் தடுப்புக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொரோனா பாதித்தவர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார், இன்னும் ஏன் கட்டுப்பாட்டு பகுதியாக வைத்து எங்களை வெளியே விட மறுக்கிறீர்கள் என கேட்டு அப்பகுதி பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மறியிலில் ஈடுபட முயன்றனர்.

இதுபற்றி தகவலறிந்த அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னர்தான் இந்த பகுதியில் கட்டுப்பாடுகள் விலக்கப்படும். அதற்கு முறையான அனுமதி வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்