கோத்தகிரி காந்தி மைதானத்தில் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது - போக்குவரத்து நெரிசல்

கோத்தகிரி காந்தி மைதானத்தில் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2020-05-17 22:15 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதி பகுதியில் கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் வசித்து வந்த அந்த பகுதியை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அனைத்து தனிக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டும் மூடப்பட்டது.

அங்கு செயல்பட்டு வந்த காய்கறி, மீன், இறைச்சி, பழக்கடைகள் காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வந்தன. அதன்பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால், கோத்தகிரியில் உள்ள அனைத்து தனிக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அதன்பின்னர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மார்க்கெட்டில் உள்ள இடமாற்றம் செய்யப்படாத கடைகளை சுழற்சி முறையில் திறக்க சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து கோத்தகிரி மார்க்கெட்டில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் அங்குள்ள 33 கடைகளை சுழற்சி முறையில் திறக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி தினமும் 11 கடைகள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று திறந்த கடைகள் அடுத்த 2 நாட்களுக்கு திறக்க அனுமதி இல்லை. இவ்வாறு சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்படுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காந்தி மைதானத்தில் உள்ள கடைகளில் மீன், கோழி, ஆட்டிறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பஸ் போக்குவரத்து இல்லாத காரணத்தால், பெரும்பாலானவர்கள் தங்களது வாகனங்கள் மூலம் காந்தி மைதானத்துக்கு வந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தூய்மை பணியாளர்கள் ஒழுங்குபடுத்தினர்.

இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறிய தாவது:-

காய்கறி, பழம், மீன், இறைச்சி கடைகள் காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு ஒருசில வாடிக்கையாளர்களே வருகின்றனர். இதனால் கூட்டம் கூட வாய்ப்பு இல்லை. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியமாகும். எனவே மார்க்கெட்டில் உள்ள பிற கடைகளையும் தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்ததால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்