சுல்தான்பத்தேரி அருகே, ஊருக்குள் புகுந்த குட்டியானையால் பரபரப்பு

சுல்தான்பத்தேரி அருகே ஊருக்குள் புகுந்த குட்டியானையால் பரபரப்பு நிலவியது.

Update: 2020-05-17 22:15 GMT
கூடலூர்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே மேப்பாடி பகுதி உள்ளது. இங்கு அடர்ந்த வனமும் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குட்டிகளுடன் கூடிய காட்டுயானை கூட்டம் மேப்பாடி ஊருக்குள் வந்தது. விடியற்காலை வரை முகாமிட்டு இருந்த காட்டுயானை கூட்டம், அதன்பிறகு அடர்ந்த வனத்துக்குள் சென்றது.

அப்போது பிறந்து சில மாதங்களே ஆன பெண் குட்டியானை ஒன்று, கூட்டத்தில் இருந்து பிரிந்து பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. மேலும் தனது தாயை பிரிந்த ஏக்கத்தால் அங்கும், இங்குமாக ஓடியது. இதை கண்ட பொதுமக்கள் குட்டியானையை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேப்பாடி வன அலுவலர் ரஞ்சித்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் பொதுமக்களின் கூட்டமும் அதிகரித்தது. இதனால் போலீசார் வரவழைக்கப்பட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்னர் வனத்துறையினர் குட்டியானையை மீட்டனர். தொடர்ந்து அதற்கு பழங்களை தின்பதற்கு கொடுத்தனர்.

இதற்கிடையில் வனத்துறையின் மற்றொரு குழுவினர் தாய் யானையின் நடமாட்டத்தை வனத்துக்குள் சென்று கண்காணித்தனர். அப்போது மேப்பாடியில் இருந்து சுமார் 1½ கி.மீட்டர் தொலைவில் வனத்துக்குள் காட்டுயானைகள் கூட்டமாக பிளிறியவாறு நின்றிருந்தன. மேலும் அதில் ஒரு யானை ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் அது குட்டியை பிரிந்த தாய் யானையாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகித்தனர். இதையடுத்து ஊருக்குள் வந்த குட்டியானையை வனத்துறையினர் வனத்துக்குள் விரட்டி சென்றனர். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு காட்டுயானை கூட்டம் நிற்கும் வனத்துக்குள் குட்டியானை விரட்டப்பட்டது. அப்போது கூட்டத்தில் தனது தாய் நிற்பதை கண்ட குட்டியானை வேகமாக ஓடி அதோடு சேர்ந்தது. மேலும் தனது குட்டியை கண்ட தாய் யானை வேகமாக ஓடி வந்து, துதிக்கையால் வருடி பாசத்தை வெளிப்படுத்தியது. இதை கண்ட வனத்துறையினரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்