ஜூன் முதல் வாரத்தில் கல்லூரி தேர்வு கால அட்டவணை அறிவிப்பு - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்

ஜூன் முதல் வாரத்தில் கல்லூரி தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.;

Update: 2020-05-18 00:00 GMT
பெங்களூரு, 

கொரோனா குறித்த நிகழ்ச்சி ஒன்று சமூக வலைத்தளம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

இந்த ஊரடங்கு காலத்தில் போலீஸ், சுகாதாரம், வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறையினர் சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளனர். கல்லூரி கல்வி தேர்வுகளை எங்கு, எப்போது, எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து துணைவேந்தர்களுடன் 5 முறை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி இருக்கிறேன்.

தேர்வு குறித்து மாணவர்கள் கவலைப்பட தேவை இல்லை. இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்களை கவனிக்க வேண்டும். இந்த பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இணையதள பிரச்சினை உள்ளவர்கள் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை கவனிக்க வேண்டும்.

கல்லூரிகளுக்கு செல்வதற்கு பதிலாக இருக்கும் இடத்தில் இருந்தே, ஆன்லைன் மூலம் கல்வியை கற்று அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு எந்த சிரமும் இருக்காது. கல்லூரி தேர்வு கால அட்டவணை குறித்து ஜூன் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.

மாணவர்களின் கல்வி

மாணவர்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. இந்த நோக்கத்தில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேர்வு நேரத்தில் இந்த கொரோனா நெருக்கடி உண்டானது. மாணவர்களின் கல்வி ஆண்டை சிறப்பான முறையில் நிறைவு செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்கள் பாடங்கள் நடத்துவதை வீடியோ எடுத்து யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்துள்ளோம். ஸ்வயம் என்ற ஆன்லைன் பக்கத்தில் பல்கலைக்கழக மானிய குழு கல்வி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்திலும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.

பரிசோதனை உபகரணங்கள்

நீட் மற்றும் சி.இ.டி. போன்ற நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கல்லூரிகளில் செப்டம்பர் மாதம் முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. ஆன்லைன் மூலமாக எல்லாவற்றையும் மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு போய் சேர்த்தது தொழில்நுட்பம் தான்.

தகவல் தொழில்நுட்பத்துறை அனைத்து நிலையிலும் கவனம் செலுத்தி சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளன. அதே போல் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மற்றும் பரிசோதனை உபகரணங்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பரிசோதனை கருவிகள், உடல் கவச உடைகள், செயற்கை சுவாச கருவிகள் உற்பத்தியில் நாம் தன்னிறை அடைந்துள்ளோம்.

மக்களின் ஒத்துழைப்பு

கொரோனாவை எதிர்கொள்வதில் பல்வேறு சவால்கள் இருந்தன. முதல்-மந்திரி எடியூரப்பா, ஊரடங்கை வெற்றிகரமாக அமல்படுத்தினார். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு நன்றாக கிடைத்தது. கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 2-ல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை 60 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தினமும் 6 ஆயிரம் பேரின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை, தனிமைப்படுத்தும் முகாம்கள், பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தொலை மருத்துவ முறையில் தினமும் 50 ஆயிரம் பேர் போன் செய்து, தங்களின் நோய்க்கு மருத்துவ ஆலோசனைகளை பெறுகிறார்கள்.

உதவி தொகுப்பு

முதல்-மந்திரி எடியூரப்பா ரூ.2,272 கோடிக்கு உதவி தொகுப்பை பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளார். மத்திய அரசும் பல்வேறு உதவிகளை அறிவித்து வழங்கியுள்ளன. விவசாயிகளின் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

மேலும் செய்திகள்