துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே புதிய அணை: திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.14.30 கோடி ஒதுக்கீடு - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தகவல்

துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.14.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.;

Update: 2020-05-17 23:35 GMT
பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த துங்கபத்ரா அணை நீரை முழுமையாக சேகரிக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. துங்கபத்ரா அணையில் அதிகளவில் தூர் நிரம்பியுள்ளது. இதனால் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருக்கிறது. இதற்கு மாற்றாக புதிதாக ஒரு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது துங்கபத்ரா அணையில் 100.86 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதில் 31.616 டி.எம்.சி. அளவுக்கு தூர் நிரம்பியுள்ளது. இதனால் அந்த அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இந்த நீரை தேக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாசனத்திற்கு தண்ணீர்

அதன்படி நவலி கிராமம் அருகே இந்த புதிய அணை கட்டப்படுகிறது. இதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க நீர்ப்பாசனத்துறை ரூ.14.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவு இன்று (அதாவது நேற்று) பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அணை மூலம் குடிநீர் பிரச்சினையை தீரும். மேலும் வறட்சி ஏற்படும் பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியும். இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கிய முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்