மராட்டியத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அரசு அறிவிப்பு
மராட்டியத்தில் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதிய உச்சமாக மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 2,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது.
கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் நோய் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா பாதிப்பை குறைக்க கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இதற்கு மத்தியில் கொரோனா ஊரடங்கு 4-ம் கட்டமாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 3-ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது.
இந்தநிலையில், மராட்டியத்தில் ஊரடங்கை மீண்டும் நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமை செயலாளர் அஜாய் மேத்தா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மராட்டியத்தில் 4-ம் கட்டமாக அமல்படுத்தப்படும் ஊரடங்கு நாளை(இன்று) நடைமுறைக்கு வரும். இது வருகிற 31-ந் தேதி வரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். பசுமை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு கூடுதல் தளர்வுகள் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 2,347 பேர்
இதற்கிடையே மராட்டியத்தில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்தது. கடந்த 11 நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 14-ந் தேதி அதிகப்பட்சமாக 1,602 பேர் பாதிக்கப்ட்டனர்.
இந்தநிலையில் ஒரேநாளில் 2 ஆயிரத்து 347 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 53 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மாநிலத்தில் மேலும் 63 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்து உள்ளது.
மும்பையில் 20 ஆயிரம்
இதில் மாநில தலைநகர் மும்பையில் நேற்று மட்டும் 1,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 967 ஆக உயர்ந்து, 20 ஆயிரத்தை தொட்டு உள்ளது.
இதேபோல மும்பையில் மேலும் 38 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதில் 28 பேர் ஆண்கள். 10 பேர் பெண்கள். இதனால் இங்கு கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே சற்று ஆறுதல் தரும் செய்தியாக மும்பையில் புதிதாக 206 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 12 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.
புனேயில் 3,464 பேர்
மும்பையை அடுத்து அதிகப்பட்சமாக புனே மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்து 464 பேர் (188 பேர் பலி) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர முக்கிய நகரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-
பிம்பிாி சின்ஞ்வாட் - 158 (4 பேர் பலி), சோலாப்பூர் மாநகராட்சி - 364 (24), சத்தாரா - 131 (2), அவுரங்காபாத் மாநகராட்சி - 842 (31), அகோலா - 241 (13), நாக்பூர் மாநகராட்சி - 355 (2).