தமிழக தொழிலாளர்களுக்காக புனே- நெல்லை இடையே சிறப்பு ரெயில் - இன்று புறப்படுகிறது

தமிழக தொழிலாளர்களுக்காக புனே- நெல்லை இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.;

Update: 2020-05-17 22:45 GMT
மும்பை, 

கொரோனா ஊரடங்கு காரணமாக மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கினர். கடந்த மாத கடைசியில் தொழிலாளர்களை அழைத்து செல்ல சிறப்பு ரெயில் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் மராட்டியத்தில் இருந்து தமிழகத்துக்கு தொழிலாளர்களை அழைத்து செல்ல ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்பட்டது. அதன்பிறகு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து மராட்டியத்தில் இருந்து தமிழகத்துக்கு ரெயில் மூலம் மராட்டிய மாநில தொழில் வளர்ச்சி கழக தலைவர் அன்பழகன் ஐ.ஏ.எஸ்., மாநில நில அளவை துறை ஐ.ஜி. சொக்கலிங்கம் ஐ.ஏ.எஸ்., லெமுரியா அறக்கட்டளை மற்றும் பல அமைப்பினர் மராட்டியத்தில் சிக்கிய தமிழர்களை ஒருங்கிணைத்து சொந்த ஊர் அனுப்பி வைக்க முயற்சி மேற்கொண்டனர்.

இன்றுரெயில்புறப்படும்

இதையடுத்து புனே- நெல்லை இடையே சிறப்பு ரெயிலை இயக்க தமிழக- மராட்டிய அரசுகள் ஒப்புதல் அளித்தன. இந்த ரெயில் இன்று (திங்கட்கிழமை) காலை புனேயில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் விழுப்புரம், திருச்சியில் நிறுத்தப்படும். நாளை மாலை 3 மணியளவில் நெல்லை சென்றடையும்.

இந்த ரெயிலில் புனே, நாசிக், தவுன்ட், சோலாப்பூர், ரத்தனகிரி, சத்தாரா பகுதிகளில் சிக்கி இருந்த தமிழக தொழிலாளர்கள் சுமார் 1,450 பேர் செல்ல உள்ளதாக லெமுரியா அறக்கட்டளை நிறுவனர் குமணராசன் கூறினார்.

மேலும் செய்திகள்