சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 15 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஆவடியில் சூப்பர் மார்க்கெட்டுக்கு ‘சீல்’

சென்னை புறநகர் பகுதியில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானது.

Update: 2020-05-17 22:45 GMT
தாம்பரம், 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வந்த தாம்பரம் ஆட்டோ டிரைவரின் குடும்பமே கொரோனா பாதிப்புக்கு ஆளாகியது. இந்த நிலையில் அவரது மகள் மூலம் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 2 பெண்களுக்கும், குரோம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் என 3 பெண் மருந்தக ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

அதேபோல் இரும்புலியூரில் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட தாம்பரத்தில் மொத்தம் 5 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல் பல்லாவரம் முத்தாலம்மன் கோவில் தெருவில் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கும், குரோம்பேட்டை பகுதியில் 3 பேருக்கும், பம்மல் பெரும்புதூர் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

போலீஸ்காரர்கள்

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் பட்டாலியனை சேர்ந்த 28 வயது போலீஸ்காரர், திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 45 வயது பெண், ஆவடி பாரதி நகரைச் சேர்ந்த 30 வயது ஆவடி போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஸ்ரீபெரும்புதூர் கார் கம்பெனியில் பணிபுரியும் ஆவடி கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்த 44 வயது ஊழியருக்கும், ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 3 பேருக்கும், திருவேற்காடு, திருநின்றவூர், புழல் மற்றும் திருவள்ளூர், கடம்பத்தூர் ஒன்றியங்களில் தலா ஒருவர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 18 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 546 ஆனது. இவர்களில் 178 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 363 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘சீல்’ வைப்பு

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் திருநின்றவூர் பேரூராட்சி அலுவலர்கள் சூப்பர் மார்க்கெட்டை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் அங்கு வேலை செய்த மற்ற ஊழியர்களையும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி வைத்து அவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்