‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மிரட்டுநிலை, ஆயிங்குடி கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட தடுப்புகள் அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மிரட்டுநிலை, ஆயிங்குடி கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டது.
அரிமளம்,
அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட வாலிபர் ஒருவரும், ஆயிங்குடி கிராமத்தில் 13 வயது சிறுமியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து மிரட்டுநிலை கிராமத்திற்கு செல்லும் மெயின் ரோடு 6 கிலோ மீட்டர் முன்பே பெருங்குடி விலக்கு ஆலமரம் அருகே அடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து சாலையை திறந்து விட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உடனடியாக சாலையை திறக்க உத்தரவிட்டார். இதையடுத்து மிரட்டுநிலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஏற்படுத்தப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் ஆயிங்குடி கிராமத்திற்கு செல்லும் சாலைகளில் ஏற்படுத்தப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் அருகேயுள்ள சாலை தடுப்புகள் அகற்றப்படவில்லை. தொடர்ந்து அப்பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.