தா.பேட்டை, முசிறியில் மணல் கடத்திய 5 பேர் கைது
தா.பேட்டை, முசிறியில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தா.பேட்டை,
தா.பேட்டை அருகே ஜெம்புநாதபுரம் கிராமத்தில் முசிறி துறையூர் சாலையில் துலையாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில் வருவாய் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கண்ணனூர் நோக்கி சென்ற சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காரை கிராம நிர்வாக அலுவலர் மீது மோத முயற்சி செய்து தப்பி உள்ளனர். இதில் சுதாரித்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜெம்புநாதபுரம் போலீசார் விரைந்து சென்று காரை மடக்கிப் பிடித்தனர். காரை சோதனையிட்டபோது அதில் தொட்டியம் அருகே மணமேடு பகுதி காவிரி ஆற்றிலிருந்து மணல் மூட்டைகள் கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக தொட்டியம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 32), பழனி (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோல், முசிறி அருகே வெள்ளுர்சத்திரம் பகுதி காவிரி ஆற்றில் இருந்து மொபட்டுகளில் மணல் மூட்டைகள் கடத்திச்சென்றதாக செந்தில் (31), பிரபு (33), பாண்டியன் (22) ஆகிய 3 பேரையும் முசிறி போலீசார் கைதுசெய்தனர். மேலும் மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 4 மொபட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் திருவெறும்பூர் அருகே வேங்கூர் நடராசபுரம் அடுத்த குளிமிக்கரை பகுதியில் திருவெறும்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக காரில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த கிருஷ்ணகுமார்(39), காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய கிருஷ்ணகுமாரை தேடி வருகிறார்கள்.