நாகை மாவட்டத்தில், 99 டாஸ்மாக் கடைகள் திறப்பு: மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர்
நாகை மாவட்டத்தில் 99 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
நாகப்பட்டினம்,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு லட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இந்தியாவிலும் இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் மது குடிக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதை தொடர்ந்து மதுப்பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 7-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். அன்று ஒரு நாள் மட்டும் நாகை மாவட்டத்தில் ரூ.4 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்துக்கு மது விற்பனையானது. தொடர்ந்து மறுநாளும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
நிபந்தனைகள் எதையும் அரசு பின்பற்றவில்லை என்றும், இதனால் மதுவிற்பனையின் காரணமாக கொரோனா தீவிரமாக பரவும் ஆபத்து இருப்பதாகவும், எனவே டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 8-ந்தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. திறக்கப்பட்ட மறுநாளே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. இதில் டோக்கன் முறையில் மதுவிற்பனை செய்யப்பட்டது. பெரும்பாலான கடைகளில் ஒரு மணி நேரத்துக்கு 70 டோக்கன்கள் வீதம் வழங்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் மொத்தம் 100 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் தேத்தாக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை திறப்பதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அந்த கடை மட்டும் திறக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் 99 கடைகள் திறக்கப்பட்டு படுஜோராக மதுவிற்பனை நடைபெற்றது.
நாகையில் நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினர். கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். சில பகுதிகளில் டோக்கன் வாங்கும் இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுப்பிரியர்கள் கூடி நின்றதால், அங்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
மயிலாடுதுறை கோட்ட பகுதியில் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய தாலுகாகளில் உள்ள 45 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகளில் 200 மீட்டருக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் மதுபாட்டில்கள் வாங்க போலீசார் அனுமதித்தனர். மது வாங்க வருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. டோக்கன் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்பட்டன.