3 நாள் முழு ஊரடங்கு தொடங்கியது: வீரகேரளம்புதூர் தாலுகாவில் கடைகள் அடைப்பு - சாலைகள் வெறிச்சோடின
3 நாள் முழு ஊரடங்கு தொடங்கியதால் வீரகேரளம்புதூர் தாலுகாவில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சுரண்டை,
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்த இதய நோயாளியான பெண் ஒருவர் சிகிச்சைக்காக சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றார். பின்னர் டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் அங்கிருந்து மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுரண்டை தனியார் ஆஸ்பத்திரியை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள், டிரைவர் ஆகியோரை தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
முழு ஊரடங்கு
மேலும், சென்னையில் இருந்து சுரண்டை வட்டாரம் ராஜகோபாலபேரிக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் மேலும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆலோசனைப்படி நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்தில் அரசு அதிகாரிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 17-ந் தேதி (அதாவது நேற்று) முதல் 19-ந் தேதி (நாளை) வரை 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி நேற்று முழு ஊரடங்கு தொடங்கியது.
சாலைகள் வெறிச்சோடியது
இதையொட்டி வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள காய்கறி, இறைச்சி, மளிகைக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள், சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. பால், மருந்தகம், ஆஸ்பத்திரிகளுக்கு மட்டும் முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் அவை மட்டும் திறந்து இருந்தன. மேலும் முழு ஊரடங்கையொட்டி வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
போலீசார் கண்காணிப்பு
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை தடுக்க சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் ஆங்காங்கே ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். முழு ஊரடங்கால் வீரகேரளம்புதூர் தாலுகா பகுதி முழுவதும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்றும், நாளையும் நீடிக்கிறது.