விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்யலாம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2020-05-17 06:41 GMT
ஜெயங்கொண்டம், 

ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போது கோடை கால மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்வதால் மண்ணில் உள்ள பூச்சி, புழுக்கள் அழிக்கப்படுவதுடன் நோய் உண்டாக்கும் பூஞ்சாணங்களும் அழிக்கப்பட்டு பூச்சி நோய் தாக்குதல் இல்லாத பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம். 

மேலும், களைகள் முற்றிலும் அழிக்கப்படுவதுடன் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனும் அதிகரிக்கிறது. கோடை உழவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளை அறிந்து விவசாயிகள் அனைவரும் கோடை உழவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடி 43, ஏடிடி(ஆர்)45, ஏஎஸ்டி 16, கோ 51 போன்ற ரகங்கள் இப்பகுதிக்கு ஏற்ற ரகங்களாகும். குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும்போது நெல் விதைகளை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்த பின் விதைக்க வேண்டும். இதனால் பயிர் நோயின்றி செழிப்பாக வளரும்.

நடவு வயலில் கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 5 டன்கள் மக்கிய தொழு உரம் அல்லது 2.5 டன்கள் பசுந்தாள் உரத்தை இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிட வேண்டும். மேலும் 200 கிலோ ஜிப்சத்தை இட்டு மண்ணுடன் கலந்து விட வேண்டும். பிறகு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்சத்தை இட வேண்டும். மேலும் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 4 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். 

இவ்வாறு நடவு வயல் தயார் செய்த பின் நாற்றுக்களை நடவு செய்து நீர் நிர்வாகம், களை நிர்வாகம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை முறைகளை கடைபிடித்தால் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம். மேலும் விவசாயிகள் நெல் சாகுபடிக்கு தேவையான நுண்ணூட்ட உரங்கள் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனாஸ் போன்ற இடுபொருட்களை மானிய விலையில் ஜெயங்கொண்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்