அறுபடை முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடக்குமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

அறுபடை முருகன் கோவில்களில் வருகிற 4-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்குமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2020-05-17 06:13 GMT
திருப்பரங்குன்றம்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முதல் படை வீடாகும். திருச்செந்தூர், பழனி கோவில்கள் 2 மற்றும் 3-வது படை வீடுகளாகும். இதே போல் மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவில் 6-வது படை வீடு தலமாக விளங்குகிறது.

அறுபடை வீடு கோவில்களில் ஆண்டு முழுவதும் பல்வேறு திரு விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், சங்க இலக்கியங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்ததுமான இந்த கோவில்களில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றவற்றுக்கு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பாத யாத்திரையாகவும் வந்து கலந்துகொள்வார்கள்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கோவிலில் நித்யகால பூஜைகளை வழக்கம்போல் அர்ச்சகர்கள் நடத்தி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, சித்திரை வசந்த திருவிழா போன்ற விழாக்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக திருவிழாவும் வருகிற 4-ந்தேதி நடக்குமா? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து கோவில் ஊழியர்கள் கூறும் போது, “ஊரடங்கு தளர்வில், கோவிலில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்வதற்கும், விழாக்களை நடத்துவதற்கும் அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

மேலும் செய்திகள்