கறம்பக்குடி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பெண்கள் மறியல் செய்ய முயற்சி
கறம்பக்குடி அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
கறம்பக்குடி,
கறம்பக்குடி அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
சாலை மறியல் முயற்சி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள துவார் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக திறக்கப்பட்ட இந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி பெண்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். போராட்டங்களும் நடைபெற்றது. இந்நிலையில், ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நேற்று மீண்டும் கடை திறக்கப்பட்டது.
இதன்படி நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் துவார் கிராமத்தில் உள்ள கடைக்கு வந்து விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டனர். போலீசாரும், தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது டாஸ்மாக் கடை முன்பு கூடிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சாலை மறியல் செய்ய முயன்றனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து அவர்களிடம் மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் போராட்டம் வேண்டாம் எனவும், மனு கொடுத்து கலைந்து செல்லும் படியும் கேட்டு கொண்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.