வேலூர் மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தில் 14 ஏரிகள் தூர்வாரப்படும் - கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 14 ஏரிகள் தூர்வாரப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் தூர்வார 2020-2021- ம் ஆண்டிற்கான குடிமராமத்து பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினர்.
அப்போது அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14 ஏரிகள் 2020-2021-ம் ஆண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட உள்ளது. இதன் மூலம் பல ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும். ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 157 குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது.
நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக நீர்பாசன ஆயக்கட்டுதாரர்களைக் கண்டறிந்து ஏரி நீர் பாசன சங்கத்தை உருவாக்கிட வேண்டும்.
ஆயக்கட்டுதாரர்களின் முழு பங்கும் இப்பணிகளில் இருப்பதை கட்டாயமாக உறுதி செய்திட வேண்டும். அவர்களின் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை முதலில் அளவீடு செய்து அவற்றை சீரமைக்க வேண்டும். ஏரிகளின் கட்டமைப்புகளை சீரமைத்தல், கால்வாய்களை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தேவையான பணிகளை ஆய்வு செய்திட வேண்டும்.
இது சம்மந்தப்பட்ட பணிகளில் தாசில்தார்கள் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். இப்பணிகளை விரைந்து முடித்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் (நீர்வளத்துறை), தாசில்தார் சரவணமுத்து மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.