மும்பையில் இருந்து விருதுநகர் வந்தவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா

மும்பையில் இருந்து விருதுநகர் மாவட்டம் வந்த 5 தொழிலாளர்களுக்கு கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல் ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு நெல்லையில் நடந்த பரிசோதனையில் தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2020-05-16 22:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை பல்வேறு கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் 105 பேரும், கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 29 பேரும், காரியாபட்டி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 84 பேரும், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 50 பேரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 5 தொழிலாளர்கள் காரியாபட்டி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மறவர்பெருங்குடியை சேர்ந்த 44 வயது நபர், மீனாட்சிபுரத்தை சேர்ந்த 45 வயது நபர், பிள்ளையார்குளத்தை சேர்ந்த 34 மற்றும் 39 வயது நபர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூரை சேர்ந்த 54 வயது நபர் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் மராட்டிய மாநிலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக பணியாற்றி அங்கிருந்து விருதுநகர் மாவட்டம் திரும்பியவர்கள் ஆவர்.

பாதிக்கப்பட்ட இவர்கள் 5 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்த 53 வயதானவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 522 பேருக்கான மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் மாவட்டத்தில் நோய் தொற்றின் உண்மை நிலவரத்தை உடனடியாக தெரியமுடியாத நிலை நீடிக்கிறது.

மேலும் செய்திகள்