மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் ஆவேசம்
மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரியை சாலையின் நடுவில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஆவேசம் அடைந்தனர்.
ராமேசுவரம்,
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்பேரில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஒரு வாரத்திற்கு பிறகு பாம்பனில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளும் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. இந்த கடைகளில் மது வாங்குவதற்கு காலை 8 மணியில் இருந்தே நீண்ட வரிசையில் ‘குடி’மகன்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் காத்திருந்தனர். 10 மணியளவில் அவர்கள் அனைவருக்கும் பச்சை நிற டோக்கன் வழங்கப்பட்டது.
அதை வைத்திருந்தவர்களுக்கு மட்டும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. ஒவ்வொருவரும் 2-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர். அவற்றை பைகளிலும், கூடைகளிலும், ஹெல்மெட்டிலும் வைத்து தங்கள் இருப்பிடங்களுக்கு கொண்டு சென்றனர். கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு கடைகளின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றிற்கு ராமநாதபுரத்தில் உள்ள குடோனில் இருந்து லாரி மூலம் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டது.
அந்த லாரியானது முக்கிய சாலையான ரெயில்வே நிலைய சாலையில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அங்கிருந்த டாஸ்மாக் கடையின் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்ய முன்வரவில்லை.
இதனால் பொறுமை இழந்த வாகன ஓட்டிகள், லாரி டிரைவரிடம் லாரியை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நிறுத்துமாறு தெரிவித்தனர். சிலர் உடனடியாக தங்களுக்கு வழி விட வேண்டும் என்று ஆவேசமாக கூச்சலிட்டனர்.
அதன்பின்னரே அந்த லாரியானது ரெயில் நிலையம் அருகே கொண்டு சென்று நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை கடைக்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.