ஆலங்காயம் அருகே, கரும்பு தோட்டத்தை சூறையாடிய ஒற்றை யானை
ஆலங்காயம் அருகே கரும்பு தோட்டத்தை காட்டு யானை நாசம் செய்தது.;
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்து கரும்பு, மாங்காய், தக்காளி போன்ற பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் காவலூர் முருகர் கோவில் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம், தக்காளி செடிகள் ஆகியவைகளை ஒற்றை காட்டு யானை நாசம் செய்தது. அதே போன்று அப்பகுதியை சேர்ந்த பூபதி, ஆனந்தன், தேவேந்திரன், சீனு, ராஜகோபால் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தக்காளி, மாங்காய், கேழ்வரகு ஆகிய பயிர்களை காட்டு யானை நாசம் செய்தது.
இரவு நேரங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை அப்பகுதி மக்கள் தீபந்தம் ஏற்றி காட்டுப் பகுதிக்கு விரட்டுகின்றனர். யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில் ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு போய் விடப்பட வேண்டும். யானை அட்டகாசத்தால் இரவு நேரத்தில் அச்சமாக உள்ளது என்று கூறினர்.