அலாரம்’ வைத்து எழுந்து அதிகாலையிலேயே திரண்டனர், ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மீண்டும் திறப்பு; மதுபிரியர்கள் உற்சாகம்- நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்

‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

Update: 2020-05-16 22:30 GMT
வேலூர்,

கொரோனா மிரட்டலுக்கு இடையே ஊரடங்கு உத்தரவு மெல்ல, மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. மார்ச் 24-ந்தேதி அடைக்கப்பட்ட ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் 43 நாட்களுக்கு பின்னர் கடந்த 7-ந்தேதி திறக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகளில் மது விற்பனை நடைபெற்றது.

மதுக்கடைகளில் சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனைகளை சென்னை ஐகோர்ட்டு விதித்து இருந்தது. ‘டாஸ்மாக்’ நிர்வாகமும் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் உற்சாக மிகுதியில் சமூக இடைவெளியை மறந்தனர். ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும், முண்டியடித்தும் மதுபாட்டில்களை வாங்க முற்பட்டனர். எனவே ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றாததால் மதுக்கடைகளை மீண்டும் மூடவேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். இந்த உத்தரவு, மதுபிரியர்கள் தலையில் இடி விழுந்தது போன்று அமைந்தது. ஐகோர்ட்டு உத்தரவையடுத்து 9-ந்தேதி முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் பூட்டப்பட்டன. 7-ந்தேதி ரூ.170 கோடிக்கும், 8-ந்தேதி ரூ.140 கோடிக்கும் என 2 நாட்களில் மட்டும் ரூ.310 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இதன் மூலம் பண்டிகை கால விற்பனை வசூல் சாதனை முறியடிக்கப்பட்டது.

இந்தநிலையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கினர்.

மதுபிரியர்களுக்கு இந்த தீர்ப்பு இன்ப அதிர்ச்சியை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியதையடுத்து மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்படும் என்று ‘டாஸ்மாக்’ நிர்வாகம் உடனடியாக அறிவிப்பை வெளியிட்டது மதுபிரியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காட வைத்தது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் சென்னை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி மது விற்பனை நடைபெற்ற திருவள்ளூர் மாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளதால், அந்த மாவட்டத்திலும் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

எனவே சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

வேலூரில் காலை 10 மணிக்கு மது விற்பனை தொடங்கினாலும், மதுபிரியர்கள் அதிகாலை முதலே கடைகள் முன்பு தவம் இருந்தனர். மதுக்கடை திறக்கப்பட்டவுடன் மதுபிரியர்கள் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் மீண்டும் மதுக்கடைகளை மூடி விடுவார்களோ என்ற அச்சம் மதுபிரியர்களிடம் காணப்பட்டது.

எனவே ‘நாமே மதுக்கடைகளை மூடுவதற்கு அச்சாரமாக இருந்து விடக்கூடாது’ என்பதில் அவர்கள் கவனமாக இருந்தனர். இதனால் கடந்த 7-ந்தேதி மதுக்கடைகளில் முண்டியடித்தது போன்று இல்லாமல் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்து கட்டுப்பாடுகளை பின்பற்றி மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

சமூக இடைவெளியை மறந்த மதுபிரியர்களிடம், ‘ஒழுங்காக வரிசையில் வாருங்கள். இன்று மது கிடைக்காவிட்டாலும், நாளை வாங்கிக் கொள்ளலாம். கடை திறந்திருந்தால் எப்போது வேண்டும் என்றாலும் வாங்கி கொள்ளலாம். நாம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் மீண்டும் கடையை பூட்டி விடுவார்கள். இதனால் யாருக்கும் மது கிடைக்காமல் போய்விடும். அப்புறம் எப்போது கடை மீண்டும் திறப்பார்கள் என்று ஏங்கி கொண்டிருக்க வேண்டியது தான்’ என்று மதுபிரியர்களே அறிவுரை வழங்கியதை பார்க்க முடிந்தது.

மதுபிரியர்கள் நேற்று அதிகாலையில் ‘அலாரம்’ வைத்து எழுந்து மதுக்கடைகள் முன்பு வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

நீண்ட தொலைவுக்கு வரிசை இருந்தாலும், கத்திரி வெயில் கொளுத்தினாலும் மதுபிரியர்கள் மனம் தளரவில்லை. கால்கடுக்க காத்திருந்து தங்களுக்கு பிடித்தமான மதுவகைகளை வாங்கி சென்றனர். ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் மது வாங்கிக் கொள்ளலாம் என்று அரசு தாராள மனதுடன் அறிவித்ததால் மது பிரியர்கள் அகம் மகிழ்ந்தனர். காய்கறி வாங்குவது போன்று கட்டை பைகள், துணி பைகள், கோணி பைகளில் மதுபாட்டில்களை போட்டு எடுத்து சென்றனர்.

மதுபிரியர்களின் அலைமோதிய கூட்டத்தால் மது விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மதுபாட்டில்கள் வேகமாக விற்றுத் தீர்ந்தன. பணம் வாங்குவது, மதுபாட்டில் கொடுப்பது என்று ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் ஊழியர்கள் சோர்ந்து போனார்கள். முதலில் வரும் 500 பேருக்கு மட்டுமே மது கிடைக்கும். மற்றவர்களுக்கு வண்ண நிற டோக்கன் அடிப்படையில் அடுத்தடுத்த நாட்களில் மது விற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி கிழமைக்கு ஏற்றவாறு டோக்கன்கள் வழங்கப்பட்டன. மது கிடைக்காதவர்கள் டோக்கனை வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை, காகிதப்பட்டறை, மூலக்கொல்லை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு காலை முதலே குடிமகன்கள் வரத்தொடங்கியதால் அந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மூலக்கொல்லை பகுதியில் உள்ள கடையின் அருகே டோக்கன் பெறுவதற்காக 300-க்கும் மேற்பட்டோர் அங்கு சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர்.

புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் மதுவாங்க வந்தவர்களுக்கு புதிய பஸ் நிலையத்தில் டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 70 பேருக்கு வீதம் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 500 டோக்கன் வழங்கினர். மது வாங்க வந்த குடிமகன்களில் பெரும்பான்மையானவர்கள் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுவாங்க கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் ஒரு டோக்கன் பெற்றவர்கள் எண்ணற்ற மதுபாட்டில்களை வாங்கிச் சென்றார். டோக்கன் கிடைக்காதவர்கள் டோக்கன் பெற்றவரிடம் பணம் கொடுத்து மது வாங்கிச் சென்றனர்.

மேலும் செய்திகள்