ஊட்டி தாவரவியல் பூங்கா அருகில், காலில் காயத்துடன் நடக்க முடியாமல் தவித்த சிறுத்தைப்புலி - வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்

ஊட்டி தாவரவியல் பூங்கா அருகில் காலில் காயத்துடன் நடக்க முடியாமல் சிறுத்தைப்புலி தவித்தது. அதனை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.;

Update: 2020-05-16 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல்பகுதியில் ராஜ்பவன், போலீஸ் சூப்பிரண்டு வீடு, பூங்கா பணியாளர்கள் குடியிருப்பு, கார்டன் மந்து ஆகியவை உள்ளது. இப்பகுதியை சுற்றிலும் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தைப்புலி, கடாமன், கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலையில் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தைப்புலி ஒன்று காலில் காயத்துடன் படுத்து கிடந்தது. மேலும் நடந்து செல்ல முடியாமல் தவித்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் நீலகிரி வன அதிகாரி குருசாமி, உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறும்போது, காயத்துடன் கிடக்கும் ஆண் சிறுத்தைப்புலிக்கு 6 வயது முதல் 7 வயது வரை இருக்கும். மற்ற வனவிலங்குகளை வேட்டையாடும் போது ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து இருக்கலாம். அல்லது மேடான பகுதியில் இருந்து பள்ளமான பகுதிக்கு தாவி குதிக்கும் போது காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்றனர்.

இதையடுத்து சிறுத்தைப்புலியை மீட்டு, சிகிச்சை அளிக்குமாறு கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் டாக்டர்கள் வரவில்லை. இதனால் காயத்தால் சிறுத்தைப்புலி உயிருக்கு போராடியது. அதனை தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தைப்புலிக்கு மயக்க ஊசி போட்டனர். பின்னர் வலை போட்டு பிடித்து, வாகனத்தில் ஏற்றி ஊட்டி கூட்ஷெட் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் சிறுத்தைப்புலிக்கு சிகிச்சை அளித்தனர். காயம் அடைந்த சிறுத்தைப்புலிக்கு உள்காயம் உள்ளது. மயக்க நிலையில் இருப்பதோடு, நல்ல நிலையில் காணப்படுகிறது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்