வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து, கோவைக்கு அழைத்துவரப்பட்ட 49 பேருக்கு கொரோனா பரிசோதனை - 17 பேர் கண்காணிப்பு மையத்தில் தங்க வைப்பு
வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து கோவைக்கு அழைத்துவரப்பட்ட 49 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேர் அரசு கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.;
கோவை,
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் பணிக்கு சென்ற தமிழர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதேபோல் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதன்படி மராட்டியம் மற்றும் கேரள மாநிலங்களில் சிக்கி தவித்த தமிழர்கள் பலர் மீட்கப்பட்டு உள்ளனர். இதேபோல் மாலத்தீவில் தவித்த தமிழர்களும் மீட்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கி தவித்த கோவையை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் கோவைக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டம் சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறி விட்டது. இதனை பச்சை மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிநாடு, வெளி மாநிலங்களில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி மராட்டியம், கேரளா ஆகிய மாநிலங்களில் சிக்கிய தமிழர்கள் பஸ் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதேபோல் மாலத்தீவில் சிக்கிய தமிழர்கள் கப்பல் மூலம் மீட்கப்பட்டு கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தமிழகத்திற்கு அவர்கள் பஸ்சில் அழைத்து வரப்பட்டனர்.
இதில் கோவையை சேர்ந்த 43 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 6 பேர் வெளிநாட்டில் இருந்தும் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கோவை அழைத்து வரப்பட்டு அவர்கள் அனைவரின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் 17 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். தமிழகத்தில் மாவட்டம் விட்டு, வேறு மாவட்டம் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே பிற மாவட்டங்களில் இருந்து கோவை வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களில் பிற மாவட்டங்களை சேர்ந்த 880 பேர் கோவை திரும்பி உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து கோவை வருபவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.