நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அமைக்க ஏற்பாடு ரூ.11¾ கோடியில் பல அடுக்கு வாகன காப்பகம் கூரை ஷெட்டுகள் அகற்றம்

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் ரூ.11 கோடியே 75 லட்சத்தில் பல அடுக்கு வாகன காப்பகம் கட்டப்படுகிறது. இதற்காக அங்குள்ள கூரை ஷெட்டுகள் அகற்றப்பட்டு வருகிறது.;

Update:2020-05-17 07:20 IST
நெல்லை, 

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் ரூ.11 கோடியே 75 லட்சத்தில் பல அடுக்கு வாகன காப்பகம் கட்டப்படுகிறது. இதற்காக அங்குள்ள கூரை ஷெட்டுகள் அகற்றப்பட்டு வருகிறது.

பல அடுக்கு வாகன காப்பகம்

நெல்லை மாநகராட்சி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. ரூ.78 கோடி திட்ட மதிப்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதேபோல் நெல்லை டவுன் போஸ் மார்க்கெட் ரூ.10 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் ரூ.58 கோடி திட்ட மதிப்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது.

தற்போது நெல்லை புதிய பஸ்நிலையத்தில் ரூ.11 கோடியே 75 லட்சம் செலவில் பல அடுக்கு வாகன காப்பகம் கட்டப்பட உள்ளது. அதற்கான பணிகள் நேற்று தொடங்கின. தற்போது செயல்பட்டு வரும் வாகன காப்பகத்தின் பின்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் மற்றும் கூரை ஷெட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

2 நாள் அவகாசம்

கொரோனா வைரஸ் காரணமாக பஸ்கள் இயக்கப்படவில்லை. தனது மோட்டார் சைக்கிளை வாகன காப்பகத்தில் நிறுத்தி விட்டு சிலர் வெளியூர் சென்றுள்ளனர். இதனால் வாகன காப்பகத்தில் பல நாட்கள் மோட்டார் சைக்கிள்கள் எடுக்காமல் தேங்கி கிடக்கின்றன. சில மோட்டார் சைக்கிள்கள் பல மாதங்களாக கிடக்கிறது.

முதற்கட்டமாக இந்த மோட்டார் சைக்கிள்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகன காப்பத்தில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்கள் உரிய கட்டணம் செலுத்தி 2 நாட்களுக்குள் எடுத்து செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அறிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு கட்டுமான பணிகள் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்