தஞ்சை மாவட்டத்தில் ரூ.7½ கோடியில் கல்லணை கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

தஞ்சை மாவட்டத்தில், ரூ.7 கோடியே 53 லட்சம் மதிப்பில் கல்லணை கால்வாயில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2020-05-16 23:05 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில், ரூ.7 கோடியே 53 லட்சம் மதிப்பில் கல்லணை கால்வாயில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

ரூ.67 கோடி நிதி ஒதுக்கீடு

காவிரி டெல்டாவில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.67 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 392 பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தஞ்சை கீழ்க்காவிரி வடிநில வட்ட கட்டுப்பாட்டில் உள்ள கோட்டங்களின் மூலம் 360 பணிகள் ரூ.63 கோடியே 93 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வார 165 பணிகள் 944.77 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.22 கோடியே 91 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ.7.53 கோடியில் தூர்வாரும் பணிகள்

அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை கால்வாய் கோட்டத்தில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.7 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கல்லணை கால்வாயின் மொத்த தூரம் 109 கிலோ மீட்டர். 1096 பாசன கிளை வாய்க்கால்கள் உள்ளன.

இவற்றில் 442.79 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் தஞ்சை அருகே உள்ள கண்டிதம்பட்டு கிராமத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் மற்றும் உதவி என்ஜினீயர்கள் சேந்தன், அன்புசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜூன் 12-ந்தேதிக்குள் முடிக்கப்படும்

கல்லணை கால்வாயில் உள்ள 1205 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.7 கோடியே 53 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. தற்போது 442.79 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண்வாரும் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியானது இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்குள் முடிக்கப்பட்டு விடும் என்று செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்