கொரோனாவை கட்டுப்படுத்த கோயம்பேடு பகுதிகளில் சிறப்பு மூலிகை தேனீர் வினியோகம் - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை கோயம்பேடு பகுதிகளில் சிறப்பு மூலிகை தேனீர் வினியோகத்தை அதிகாரிகள் நேற்று தொடங்கி வைத்தனர்.

Update: 2020-05-16 23:00 GMT
சென்னை, 

சென்னை கோயம்பேடு பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, கோயம்பேடு சீமாத்தம்மன் கோவில் தெரு பகுதிகள், அய்யப்பா நகர், அவ்வை திருநகர், திருவீதி அம்மன் கோவில் தெருக்களில் உள்ள மக்களுக்கு ஆட்டோக்கள் மூலம் கபசுர குடிநீர் மற்றும் சிறப்பு மூலிகை தேனீர் வினியோகத்தை கொரோனா தடுப்பு சென்னை மண்டல சிறப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

அவர்களுடன் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் எஸ்.கணேசன், மத்திய வட்டார துணை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், சித்த மருத்துவர் கே.வீரபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க பல்வேறு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் திட்டம் வகுத்து பகுதிவாரியாக நோயின் தாக்கத்தை படிபடியாக குறைத்து வருகிறோம்.

அதிகமாக கொரோனா தொற்று உள்ள இடங்களில் கபசுர குடிநீர் முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது. கை கழுவும் பழக்கம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுமையான ‘ஹெல்த் டிரிங்க்ஸ்’ (சிறப்பு மூலிகை தேனீர்) கொடுத்து, 4, 5 நாட்களில் நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். எல்லாரும் பொது இடங்களில் முக கவசம் அணிந்தாலே கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்று மூத்த விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து சொல்லி இருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்படி முக கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். எங்களுடைய ஒட்டுமொத்த முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கபசுர குடிநீர் போலியாக தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறுகையில், “10 நாட்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் இப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும். பல்வேறு மூலிகை கொண்டு சித்த மருத்துவர் கே.வீரபாபு தயாரித்த சிறப்பு மூலிகை தேனீரும் வழங்கப்பட உள்ளது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் 35 ஆயிரம் பேர் களப்பணியில் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் 10 நாட்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்