மாவட்டம் முழுவதும் 128 டாஸ்மாக் கடைகள் திறப்பு - நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 128 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றனர்.

Update: 2020-05-16 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கியது.

இந்த நிலையில் ஐகோர்ட்டு, டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

128 கடைகள் திறப்பு

இதையடுத்து டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 145 கடைகள் உள்ளன. இதில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு மாவட்டம் முழுவதும் மொத்தம் 128 கடைகள் திறக்கப்பட்டன.

கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது. மணி வாரியாக வழங்கப்பட்ட டோக்கனை பெற்றுக்கொண்ட மதுப்பிரியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

நீண்ட வரிசையில்...

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைவாக இருந்தது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள சில கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். சில கடைகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடியும் காணப்பட்டது.

மேலும் செய்திகள்