தென்காசி- ஆலங்குளம் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
தென்காசி, ஆலங்குளத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்.;
தென்காசி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா உத்தரவின்பேரில் தென்காசி நகரில் வீடு வீடாக காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளதா? என நகராட்சி பணியாளர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று காலை உமரே பாரூக்தெரு மற்றும் கன்னி மாரம்மன் கோவில் தெருக்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, கைலாச சுந்தரம், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் வழியாக வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பணிகள் நடைபெறுவது குறித்து கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆலங்குளத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குளம் அருகே உள்ள காளாத்திமடம் கிராமம் மற்றும் ஆலங்குளத்தில் உள்ள தனிமை முகாமிற்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆலங்குளம் சோதனை சாவடிக்கு சென்று பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் வாகன சோதனையில் தீவிரமாக செயல்பட அறிவுறுத்தினார்.
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு ஜாஹிர் உசேன், தாசில்தார் பட்டமுத்து, ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன், சுகாதார ஆய்வளர்கள் கங்காதரன், மணிகண்டன் ஆகியோர் வந்திருந்தனர்.