தேனி மாவட்டத்தில் சிறுமி உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் நேற்று சிறுமி உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.;
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று சிறுமி உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6 பேர் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 42 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி விட்டனர். போடியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற அனைவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரம், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
13 வயது சிறுவன்
ஓடைப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய நிலையில் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் மூலம் ஓடைப்பட்டியில் மேலும் சிலருக்கு கொரோனா பரவி உள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் வரை அந்த ஊரில் மட்டும் லாரி டிரைவர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 24 வயது பெண், மற்றொருவர் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பெண்ணின் 13 வயது மகன் ஆவான். அவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசித்தவர்கள்.
ஆம்புலன்ஸ் டிரைவர் குடும்பம்
அதேபோல், முத்துலாபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் அதே பகுதியில் வசிப்பவர். இந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் மதுரை ஆணையூரில் வசிக்கிறார். அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்து அவர் சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்துள்ளார். மதுரையில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவு வரும் முன்பே அவர் தனது 7 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் முத்துலாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த டிரைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து முத்துலாபுரத்தில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருடைய தந்தை, தாய், மகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் அவருடைய உறவினர் ஆகிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
78 ஆக உயர்வு
ஒரே நாளில் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று முத்துலாபுரம் கிராமமும் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த கிராமத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் வீடு உள்ள தெருவுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.