திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணி ஆசிரியை உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 115 ஆக உயர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணி ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணி ஆசிரியை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மேலும் 3 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்கள் உள்பட மொத்தம் 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் 97 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். ஒருவர் மட்டும் இறந்து விட்டார். மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கு தினமும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதில் நேற்று பெண் உள்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் சின்னாளப்பட்டியை அடுத்த ஆலமரத்துப்பட்டி போக்குவரத்துநகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும் ஒருவர்.
முதல் கர்ப்பிணி
இவர் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் அவர் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதற்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணி இவர் ஆவார். இவரது கணவர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
கோயம்பேடு தொழிலாளி
அதேபோல் மற்றொருவர் குஜிலியம்பாறை அருகேயுள்ள சூலப்புரத்தை சேர்ந்த 51 வயது ஆண். மராட்டிய மாநிலத்துக்கு வேலைக்காக சென்ற இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். இதனால் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய, நிலக்கோட்டை கோடாங்கிநாயக் கன்பட்டியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று கொரோனா உறுதியானது.
இதைத் தொடர்ந்து 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் இவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆக உயர்ந்தது. அதில் 17 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.