பொள்ளாச்சி அருகே 2 மகள்களுடன் ஆற்றில் மூழ்கி சத்துணவு பெண் ஊழியர் பலி குளிக்க சென்றபோது பரிதாபம்
பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, 2 மகள்களுடன் ஆற்றில் மூழ்கி சத்துணவு பெண் ஊழியர் பலியானார்.
ஆனைமலை,
பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, 2 மகள்களுடன் ஆற்றில் மூழ்கி சத்துணவு பெண் ஊழியர் பலியானார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சத்துணவு ஊழியர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி கண்ணம்மா என்ற கமலம்(வயது 40). சிங்கராம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள்கள் சந்தியா(18), சத்யா(15). அதில் சந்தியா 12-ம் வகுப்பு முடித்து இருந்தாள். சத்யா 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மகள்களுடன் கண்ணம்மா கொண்டம்பட்டியில் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆனைமலை அருகே இந்திரா நகரில் உள்ள தனது மாமியார் பாக்கியம் வீட்டுக்கு கண்ணம்மா 2 மகள்களுடன் சென்றார்.
ஆற்றில் மூழ்கினர்
இந்த நிலையில் நேற்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள ஆழியாற்றில் கண்ணம்மா தனது 2 மகள்களுடன் குளிக்க சென்றார். அங்கு கரையில் அமர்ந்து கண்ணம்மா துணி துவைத்து கொண்டு இருந்தார். மகள்கள் 2 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென சத்யா ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டாள். இதனால் தண்ணீரில் மூழ்கி அவள் தத்தளித்தாள்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணம்மா, உடனடியாக தண்ணீரில் இறங்கி சத்யாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து சந்தியாவும் அவர்களை காப்பாற்ற சென்றாள். ஆனால் அவளும் தண்ணீரில் மூழ்கினாள். அடுத்தடுத்து 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
உடல்கள் மீட்பு
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து 3 பேரின் உடலையும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.