ஆலங்குடி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஆலங்குடி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-05-16 02:17 GMT
ஆலங்குடி, 

ஆலங்குடி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி தற்கொலை

ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டை சம்பாமனை பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் சுமித்திரா (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சுமித்திரா தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். சுமித்திரா உடல் கிடைக்கவில்லை.

இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி பின்னர், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சுமித்திரா உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆலங்குடி போலீசார் சுமித்திரா உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேக்கரிக்கு ‘சீல்’

*ஆவுடையார்கோவில் கடைவீதியில் உள்ள பேக்கரியில் வாடிக்கையாளர்களுக்கு டீ விற்பனை செய்ததால் ஆவுடையார் கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் முன்னிலையில் அந்த பேக்கரிக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

*புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வீரமணி ஆகியோர் அன்னவாசல், இலுப்பூர் பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக்கடை, சிறிய வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு எலி மருந்து உள்ளிட்ட விஷத்தன்மை கொண்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.மேலும் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.

சரக்கு வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி

*பொன்னமராவதியில் இருந்து நெற்குப்பைக்கு காயாம்புஞ்சை வழியாக சரக்கு வேன் ஒன்று இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு சென்றது. சரக்கு வேனை அடைக்கன் என்பவர் ஓட்டினார். கூலித்தொழிலாளர் களான பொன்னமராவதி, பாண்டியமான்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (44), சரக்கு வேனில் பின்புறமும், அப்துல்கரீம் என்பவர் டிரைவரின் அருகிலும் இருந்துள்ளனர். காயாம்புஞ்சை சாலையில் சரக்கு வேன் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சரக்கு வேன் பின்புறம் இருந்த சுப்பிரமணியன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

*கீரமங்கலம் கடைவீதியில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் கீரமங்கலம் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட எலி மருந்து மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்