புதுக்கோட்டையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் அண்டை நாடான மாலத்தீவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு விமானம் மூலம் கொச்சி வந்தனர்.

Update: 2020-05-16 02:01 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் அண்டை நாடான மாலத்தீவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு விமானம் மூலம் கொச்சி வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கன்னியாகுமரி வந்தனர். அவர்களை அங்குள்ள அதிகாரிகள், புதுக்கோட்டைக்கு காரில் அனுப்பி வைத்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாவா பள்ளிவாசல் பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே காரில் வந்த அந்த 6 பேரையும் அதிகாரிகள் அழைத்து சென்று அருகில் உள்ள அரசு பள்ளி முகாமில் தங்க வைத்தனர். இதில் 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து வந்த 6 பேரில் 24 வயதுடைய குளத்தூர் புலியூர் பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று நேற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் புதுக்கோட்டையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

புதுக்கோட்டையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 6 ஆக இருந்தது. இதில் மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்த வாலிபர், ஆயிங்குடியை சேர்ந்த சிறுமி ஆகிய 2 பேரும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் புதுக்கோட்டையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆன நிலையில் 5 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்