கொரோனா ஊரடங்கால் முடங்கிய பலாப்பழ வியாபாரம் கிலோ ரூ.15, ரூ.20-க்கு விற்பனை
திருச்சியில் கொரோனா ஊரடங்கால் பலாப்பழ வியாபாரம் முடங்கி போனது. கிலோ ரூ.15, ரூ.20-க்கு விற்கப்படுகிறது.
திருச்சி,
திருச்சியில் கொரோனா ஊரடங்கால் பலாப்பழ வியாபாரம் முடங்கி போனது. கிலோ ரூ.15, ரூ.20-க்கு விற்கப்படுகிறது.
பலாப்பழ சீசன்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் திருச்சி மாவட்டத்தில் அனைத்து வியாபாரமும் முடங்கி உள்ளது. குறிப்பாக மே மாதத்தில் அதிக அளவில் மாம்பழம், பலாப்பழங்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது காந்தி மார்க்கெட் ஜீ-கார்னர் திடலுக்கு மாற்றப்பட்டாலும் பெரிய அளவில் பலாப்பழங்கள் வருவதில்லை. குறிப்பாக பண்ருட்டி பகுதியில் இருந்துதான் அதிக அளவில் பலாப்பழம் வருவதுண்டு.
ஆனால், தற்போது ஊரடங்கால் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. விற்பனையும் முடங்கி விட்டது. மேலும் அவற்றை பறித்து விற்க முடியாமல், மரத்திலேயே பலாப்பழங்கள் பழுத்து அழுகும் நிலைக்கு வந்து விட்டது.
குறைந்த அளவிலேயே பலாப்பழங்கள் திருச்சிக்கு வந்தாலும் விலையும் மிக குறைவாகவே உள்ளது. இது குறித்து திருச்சி இ.பி.ரோட்டில் பலாப்பழம் மொத்த வியாபாரம் செய்து வரும் பதுருல்லா கூறியதாவது:-
கிலோ ரூ.15-க்கு விற்பனை
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சீசன் வேளையில் கேரளா மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலாப்பழம் கொண்டு வரப்படும். தற்போது பலாப்பழ சீசனாக இருந்தாலும், முழுமையான கனரக வாகன போக்குவரத்து வசதி இல்லை. மேலும் ஊரடங்கால் மக்களும் முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களும் ஆர்வமாக முன்புபோல பலாப்பழங்களை வாங்க வருவதில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட இடங்களில் இருந்துதான் தற்போது கூடுதலாக பலாப்பழங்கள் வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கஜாபுயல் தாக்கத்தால் பலாப்பழ உற்பத்தி வெகுவாக அங்கு குறைந்திருந்தது. இப்போது அங்கு நிலமை சரியாகி விட்டது. மேலும் போக்குவரத்து சேவை குறைபாட்டால் பண்ருட்டியில் இருந்து குறைந்த அளவிலேயே பலாப்பழங்கள் வருகிறது. ஒரு பழம் 5 கிலோ முதல் 20 கிலோ எடை வரை இருக்கும். தற்போது கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.
முடங்கிய வியாபாரம்
திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியான கரூர், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீசன் வேளையில் பலாப்பழங்களை வாங்க சில்லரை வியாபாரிகள் அதிக அளவில் வருவதுண்டு. ஆனால், தற்போது யாரும் வரவில்லை. இதனால், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழ வியாபாரம் முடங்கிபோய் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் இருந்து இவரது கடைக்கு வந்த பலாப்பழம் ஒன்று இதயம் வடிவில் இருந்தது.