குமரியில் அழகு நிலையங்களை திறக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
குமரி மாவட்டத்தில் அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
அழகு நிலையங்கள்
அழகு நிலைய பெண்கள் குழுவை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு காரணமாக எங்களுடைய அழகு நிலைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அன்றாட செலவுக்கான பணம் கூட இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம்.
நிவாரணம்
அழகு நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் அது சார்ந்து இருக்கும் பணியாளர்களும் வேலை மற்றும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றோம். தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஒரு சில தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் தனிக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அழகு நிலையம் திறப்பது பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
முடங்கிக் கிடக்கும் எங்கள் தொழில் மற்றும் அதை சார்ந்து இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்கி உதவ வேண்டும். மேலும் அழகு நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளிக்கும் பட்சத்தில் பாதுகாப்பான முறையில் அனைத்து விதமான நோய் தடுப்பு தற்காப்புகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவோம். அதாவது முக கவசம், கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.