ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்

திருவண்ணாமலையில்ள ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணி 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.

Update: 2020-05-16 00:23 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் உள்ள திண்டிவனம் சாலையில் ரெயில் தண்டவாளத்தை மையமாக கொண்டு ரூ.30 கோடியே 38 லட்சம் மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தண்டவாளத்தின் இடையில் உள்ள இணைப்பு பாலம் ரு.2 கோடியில் அமைக்கப்பட உள்ளது. தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் நிறைவடைகிறது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் 7 மீட்டர் அகலத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கப்படுகிறது. மேம்பாலத்தின் இருபுறமும் நடைபாதையுடன் கூடிய வடிகால்வாய்கள் அமைக்கப்படுகிறது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பாதசாரிகள் ஓய்வு எடுப்பதற்கு மேம்பாலத்தின் கீழ் மேடையும் அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்காக திண்டிவனம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. திண்டிவனம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ள பகுதியில் மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில் தாலுகா அலுவலகம் உள்ள பகுதியில் பில்லர்கள் அமைத்து மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கட்டுமான தொழில்கள் உள்பட பல்வேறு தொழில்கள் முடங்கின. இதனால் மேம்பாலம் அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 50 நாட்களுக்கு பிறகு தொடங்கி ஓரிரு நாட்களாக பணிகள் நடந்து வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்