கர்நாடகத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கு 17 கட்டுப்பாடுகள் - சுகாதாரத்துறை அறிவிப்பு
கர்நாடகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த 17 புதிய கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக திருமண நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், திருமண நிகழ்ச்சிகள் நடத்த 17 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை திருமணம் செய்யும் மணமக்களும், இதில் கலந்துகொள்பவர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த 17 புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:-
கர்ப்பிணி, குழந்தைகளுக்கு தடை
* திருமணங்களுக்கு உள்ளூர் நிர்வாகத்தினரிடம் (கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகரசபை, மாநகராட்சி, டவுன் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு நிர்வாக அமைப்பிடம்) இருந்து அனுமதி பெறுவது கட்டாயமாகும்.
* ஒரு திருமணத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சேரக் கூடாது.
* திருமண மண்டபங்களை தவிர்த்து திறந்தவெளி இடத்திலோ அல்லது வீட்டிலேயோ திருமண நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
* திருமணத்தின் போது திருமணம் நடைபெறும் இடம் மற்றும் வாகனங்களில் குளிர்சாதன வசதி (ஏ.சி.) பயன்படுத்தக் கூடாது.
* கர்ப்பிணிப் பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்
* கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த கூடுதல் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.
* திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில் உள்ள நுழைவாயிலில் சானிடைசர் திரவம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
* மணமக்கள் மற்றும் திருமணத்தில் பங்கேற்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
* திருமணத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடலின் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், சுவாச பிரச்சினை உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.
* அனைவரும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
* சோப்பால் கை கழுவ ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.
* பொது இடத்தில் எச்சில் துப்ப அனுமதிக்க கூடாது.
மதுபானம், குட்கா, புகையிலைக்கு தடை
* திருமண நிகழ்ச்சியை கண்காணிப்பு அதிகாரி கண்காணிப்பில் நடத்த வேண்டும்.
* திருமணம் செய்யும் மணமக்களின் பெயர், விவரங்கள் அடங்கிய விவரத்தை கண்காணிப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
* திருமண நிகழ்ச்சி நடத்துபவர்கள் சுகாதாரத் துறையின் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
* திருமணம் நடைபெறும் இடங்களில் தூய்மை பராமரிக்கப்பட வேண்டும்.
* திருமண விருந்துகளில் மதுபானம், பான்மசாலா, குட்கா, புகையிலை தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.