கொரோனா தடுப்பு, பொருளாதாரம் மீட்பு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆலோசனை

மராட்டியத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதாரம் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

Update: 2020-05-15 23:45 GMT
மும்பை, 

நாட்டிலேயே கொரோனாவால் மராட்டியம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பரவலின் மையப்பகுதிகளாக மாறியுள்ள மும்பை, புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகாவ் ஆகிய இடங்களில் ஊரடங்கை வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா பிரச்சினை மற்றும் பொருளாதாரம் மீட்பு தொடர்பாக நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல், சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

2 மணி நேரம் நடந்தது

சமூக விலகலுடன் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு, சட்டம் ஒழுங்கு நிலைமை, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கொரோனா பரவல் மையப்பகுதிகளில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்