ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 56 இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 56 இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 56 இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தன்னாட்சியோடு செயல்பட வேண்டிய காவிரி ஆணையத்தை மத்திய நீர் வளத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும். வருகிற ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் வழங்கினர். இதேபோல் பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தலைமையில் ஆர்்ப்பாட்டம் நடந்தது.
கோட்டூர், மன்னார்குடி
கோட்டூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம் அலுவலக வாசலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் துணை செயலாளர் செந்தில்நாதன், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க நகர செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். இதேபோல மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரனில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க நகரச் செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ. உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 56 இடங்களில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.