ஊரடங்கு தளர்வால் நிறுத்தி வைக்கப்பட்ட செங்கல் சூளை பணிகள் மீண்டும் தொடக்கம்

ஊரடங்கு தளர்வால் நிறுத்தி வைக்கப்பட்ட செங்கல் சூளை பணிகள் மீண்டும் தொடங்கின.

Update: 2020-05-15 23:11 GMT
அய்யம்பேட்டை,

ஊரடங்கு தளர்வால் நிறுத்தி வைக்கப்பட்ட செங்கல் சூளை பணிகள் மீண்டும் தொடங்கின. வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்று செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல் சூளைகள்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களான வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, உள்ளிக்கடை, பெருமாள்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கல் சூளைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. படுகை மண்ணில் தயாரிக்கப்படும் இந்த செங்கற்கள் நல்ல உறுதியாக இருக்கும் என்பதால் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு இந்த பகுதி செங்கற்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது.

இந்த தொழிலில் 100 உற்பத்தியாளர்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஊரடங்கு காரணமாக கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்த பகுதியில் தயாரான லட்சக்கணக்கான செங்கற்கள் விற்பனை ஆகாமல் தேங்கிப்போய் இருந்தன.

விற்பனை தொடங்கியது

இதனால் முதலீட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் முடங்கி போனது. உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் வருமானம் இன்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் இருந்து கட்டுமான பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதையடுத்து சூளைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பட்டுக்குடி கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வரும் கண்டியூரை சேர்ந்த உற்பத்தியாளர் மாணிக்கம் கூறியதாவது:-

குறைந்த அளவு தொழிலாளர்கள்

இந்த பகுதியில் குடிசை தொழிலாக கடந்த பல ஆண்டுகளாக செங்கல் சூளைகளை குறைந்த அளவு தொழிலாளர்களை கொண்டு நடத்தி வருகிறோம். வழக்கமாக ஜனவரி மாதம் முதல் மே மாதம் முடிய தமிழகத்தில் வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.

இந்த கட்டுமான பணிகளுக்காக தேவையான செங்கற்களை எங்களிடம் ஆர்டர் கொடுத்து அதிக அளவில் வாங்கி செல்வார்கள். இந்த செங்கற்களை தயாரிக்க கூலித்தொழிலாளர்களுக்கு அட்வான்ஸ், அவர்கள் தங்குவதற்கான வசதிகள், தார்ப்பாய், டீசல் பம்ப் செட், கொட்டகை, தளவாட சாமான்கள் என தயாரித்து செங்கல் சூளை தொடங்குவோம்.

ரூ.3½ லட்சம் வரை செலவு

இந்த சூளை தொடங்குவதற்காக தொடக்க செலவுக்கே ரூ.3 லட்சம் வரை செலவாகும். தற்போதைய நிலையில் 1 லட்சம் செங்கற்கள் தயாரிக்க அறுவை கூலி, விறகு, அடுக்கும் கூலி, எரிக்கும் கூலி, போக்குவரத்து செலவு என ரூ.3½ லட்சம் வரை செலவாகிறது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டுமான பணிகள் நடைபெறாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பகுதியில் சுடப்பட்ட லட்சக்கணக்கான செங்கற்கள் விற்பனையாகாமல் தேங்கி போயின.

வருமானம் இன்றி அவதி

இதனால் உற்பத்தியாளர்கள் பலரும், செங்கல்சூளை பணிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டோம். இந்த தொழிலை பொறுத்தவரை தொடர்ந்து விற்பனை நடைபெற்றால்தான் அந்த வருமானத்தை கொண்டு அடுத்தடுத்த வேலையை தொடர முடியும். லட்சக்கணக்கான ரூபாய் முடங்கி போனதால் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி அறுவை தொழிலாளர்கள், கல் அடுக்கும் கொத்தனார்கள், சித்தாள்கள் வரை பலரும் வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஊரடங்கில் கட்டுமான பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது செங்கற்களுக்கு ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். ஊரடங்கிற்கு முன்பு ஒரு டன் விறகு ரூ.2,500-க்கு வாங்கினோம். தற்போது ரூ.3,300-க்கு வாங்குகிறோம். இதனால் எங்களுக்கு கூடுதலாக ரூ.800 செலவாகிறது. இருப்பினும் சூளை உள்ள இடத்தில் கல் ஒன்று ரூ.4 என்ற பழைய விலையிலேயே விற்பனை செய்து வருகின்றோம்.

குறைந்த வட்டியில் கடன்

இது எங்களுக்கு கட்டுப்படி ஆகக்கூடிய விலை இல்லை. இருப்பினும் சுட்ட செங்கல்களை உடனுக்குடன் விற்றால்தான் அந்த பணத்தை கொண்டு அடுத்தடுத்த பணிகளை செய்ய முடியும். ஊரடங்கால் தேங்கி போன செங்கற்கள் அதிக அளவில் விற்பனைக்கு செல்வதால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.

இந்த ஊரடங்கால் முடங்கிப்போன எங்கள் முதலீட்டை மீட்க குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும். எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்களுக்கு அரசும், வங்கிகளும் குறைந்த வட்டியில் நீண்ட கால கடன் வழங்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்