தடைக்காலம் தொடர்வதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்கள் விலை இரு மடங்கு உயர்வு மீன்பிரியர்கள் கவலை
தடைக்காலம் தொடர்வதால் தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் வரத்து குறைந்து மீன்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.;
சேதுபாவாசத்திரம்,
தடைக்காலம் தொடர்வதால் தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் வரத்து குறைந்து மீன்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மீன்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தடை உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி கடந்த மாதம் 15-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஜூன்) 15-ந் தேதி வரை 60 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சமூக இடைவெளி தேவை என்பதால் மீனவ கிராமங்களை இரு பிரிவுகளாக பிரித்து தொழில் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இருபிரிவுகளாக தொழில் செய்ய அனுமதி
தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார்திடல் ஆகிய பகுதிகள் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களிலும்
சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, அடைக்கத்தேவன், சம்பைபட்டினம், மந்திரிப்பட்டினம், செந்தலைவயல், அண்ணா நகர் புதுத்தெரு, கணேசபுரம், வல்லவன்பட்டினம், சோமநாதன்பட்டினம், சுப்பம்மாள் சத்திரம், செம்பியன்மாதேவிபட்டினம் ஆகிய பகுதிகள் திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளிலும் மீன் பிடி தொழில் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
குறைந்த அளவு மீன்கள்
இதனால் குறைந்த அளவு மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மீன் பிடிதுறைமுகங்களில் இருந்து மீன் வியாபாரிகள் அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பல்வேறு நகரங்களுக்கு மீன்களை வாங்கி சென்று விற்பனை செய்து வந்தனர்.
தற்போது விசைப்படகுகள் இல்லாமல் நாட்டு படகு மீனவர்கள் மட்டும் ஆழ்கடலை தவிர்த்து கரை ஓரங்களில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களை வெளியூர் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கிசென்று விடுகின்றனர். இதனால் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி போன்ற பகுதிகளில் உள்ள மீன் ஏலக்கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
இரு மடங்கு விலை உயர்வு
மேலும் கிராமப்புறங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவு மீன் விற்பனைக்கு வருவதால் 1 கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட காளை மீன் ரூ.700 முதல் 800 வரை விற்கப்படுகிறது. 1 கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.800 வரை விற்கப்படுகிறது.
இதேபோல் 1 கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட பொடி மீன் ரூ.450 வரை விற்கப்படுகிறது. 1 கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட இறால் ரூ.650 முதல் 700 வரை விற்கப்படுகிறது ரூ.300-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.600-க்கும் விற்கப்படுகிறது.
மீன்பிரியர்கள் கவலை
மீன்களின் விலை இருமடங்கு உயர்ந்ததாலும் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து குறைவாக உள்ளதாலும் மீன்பிரியர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.