டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் சிறப்பு ரெயில் பயணிகளை தனிமைப்படுத்த ஏற்பாடு - தெற்கு ரெயில்வேக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

டெல்லியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயிலில் வரும் பயணிகளை தனிமைப்படுத்த ரெயில்வே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-05-15 22:23 GMT
சென்னை, 

இதுகுறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லியில் இருந்து புறப்பட்டு சிறப்பு ரெயிலில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு 16-ந் தேதி (இன்று) வரும் பயணிகளுக்குகொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக தகவல் அளிக்கப்படுகிறது. பயணிகளை தனிமைப்படுத்துவதற்கு ஏதுவான வசதிகளை (கட்டணம் மற்றும் இலவசம்) சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தெற்கு ரெயில்வே செய்துதர வேண்டும்.

இந்த வசதி பற்றி பயணிகளுக்கு தெற்கு ரெயில்வே தெரிவிக்க வேண்டும். அந்த ரெயிலில் வரும் பயணிகளின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் அவர்கள் பயணிக்கும் ரெயில் பெட்டி எண் போன்றவற்றை சென்னை மாநகராட்சிக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும்.

ரெயில் வந்து நின்றதும் ஒவ்வொரு பெட்டியாக திறக்க வேண்டும். பயணிகள் வெளிவர ஒரு கதவை மட்டும் திறந்து வைக்க வேண்டும். அனைவரும் வெளியே வர தாமதம் ஆகும் என்பதால் பிரட், வாழைப்பழம், தண்ணீர் பாட்டில், பிஸ்கட் ஆகியவை ஒவ்வொரு பெட்டியிலும் வழங்கப்பட வேண்டும்.

இரவு சாப்பாடு

ரெயில்வே சுகாதார குழுக்கள் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கு போதுமான இடவசதி அளிக்கப்பட வேண்டும். அவர்களை இலவச அரசின் தனிமைப்படுத்தும் இடத்துக்கோ அல்லது கட்டணம் செலுத்தி தங்கும் ஓட்டலுக்கோ அனுப்ப வேண்டும்.

இதற்காக பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் 25 பேர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட வேண்டும். தனிமைப்படுத்தப்படும் இடங்களில் இரவு சாப்பாடு தயாராக இருக்க வேண்டும்.

தொற்று இருந்தால்...

பரிசோதனை முடிவுகளில் யாருக்காவது கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் அந்த பயணி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். தொற்று இல்லாதவர்கள் அவரது மாவட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்துள்ள பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

எதாவது ஒரு பெட்டியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்தப் பெட்டியில் பயணித்த அனைவரும் சொந்த மாவட்டத்தில் 7 நாட்களுக்கு அரசின் தனிமைப்படுத்தும் இடத்தில் வைக்கப்படுவார்கள். அதன் பின்பு வீட்டில் 14 நாட்கள் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.

ஒரு பெட்டியில் யாருக்குமே தொற்று இல்லை என்றால் அவர்கள் அனைவருமே 14 நாட்கள் வீட்டில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்