சுதந்திர போராட்டத்துக்கு ஒத்துழையாமை இயக்கம் கொரோனா வைரசை விரட்ட ஒத்துழைப்பு இயக்கம் தேவை - போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
சுதந்திர போராட்டத்துக்கு ஒத்துழையாமை இயக்கம் துணை நின்றதாகவும், கொரோனாவை விரட்ட ஒத்துழைப்பு இயக்கம் தேவைப்படுவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பேசினார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் முதல்-அமைச்சரின் ஆரோக்கிய சிறப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பயிற்சி முகாமும் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமை தாங்கினார். வாலாஜா அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சுகன்யா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
நம்நாட்டில் இயற்கையிலேயே நிறைய மூலிகை வளங்கள் உள்ளது. நம் ஆயுளை உத்தரவாதம் செய்யக்கூடிய அரிய மூலிகைகளும் நம்நாட்டில் நிறைந்துள்ளது. நம் உணவு முறையே நமக்கு பெரிய பலமாகும். கொரோனா என்ற வைரஸ் தாக்குதல் நமக்கு வருமுன், நாம் அன்றாட வாழ்க்கையில் வயல்வெளிகளில் பார்க்கும் மூலிகைகளை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நாடு விரைவில் கொரோனா தாக்குதலில் இருந்து விடுபடுகிறதோ அந்த நாடு வரும் 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் முன்னோக்கி நிற்கும். வல்லரசாக மாறும். நம்நாட்டிற்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. காவல் துறையினர் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். சுதந்திர போராட்டத்திற்கு ஒத்துழையாமை இயக்கம் துணை நின்றது, ஆனால் இப்போது கொரோனா நோயை எதிர்த்து போராட ஒத்துழைப்பு இயக்கம் தேவைப்படுகிறது.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டால் கொரோனாவை ஓட ஓட விரட்டலாம். நம் வீட்டில் மூலிகைகளை வளர்க்க வேண்டும். சத்துமிக்க காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவர் சசிரேகா நோய் எதிர்ப்பு சக்தி குறித்து விளக்கினார். ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சித்த மருத்துவர்கள், போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மூலிகை கண்காட்சியும் நடைபெற்றது. கபசுர குடிநீர் வழங்கப்பட்டது,