கொளத்தூர் அருகே, கள்ளக்காதலை கண்டித்த பெண் குத்திக்கொலை - அண்ணன் மகனுக்கு வலைவீச்சு
கள்ளக்காதலை கண்டித்ததால் அத்தையை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் பரிமளம் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி குணசுந்தரி(வயது 37). இவருடைய தம்பி லோகு. கொளத்தூர் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
குணசுந்தரியின் அண்ணன் மகனான கணேசன்(26) என்பவரும் அதே கொளத்தூர் பாலாஜி நகர் முதல் பிரதான சாலையில் வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணேசனின் மனைவி அருள்செல்வி, கணவரை விவாகரத்து செய்துவிட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஒரே பகுதியில் வசித்து வந்த கணேசனுக்கும், சித்தி முறையான லோகுவின் மனைவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் தெரிகிறது.
குத்திக்கொலை
தனது தம்பி மனைவியுடன், அண்ணன் மகன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வரும் விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந்த குணசுந்தரி, முறை தவறிய இந்த கள்ளக்காதலை கைவிடும்படி கணேசனை பலமுறை கண்டித்தார். ஆனாலும் அவர், கள்ளக்காதலை கைவிடவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, நேற்று கணேசன் வீட்டுக்கு சென்று கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், சமையல் அறையில் இருந்த கத்தியால் அத்தை என்றும் பாராமல் குணசுந்தரியை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் குணசுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கணேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.