நெல்லை- தென்காசியில் டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறப்பு: ‘சீல்’- வெல்டிங் அகற்றம்

சுப்ரீம் கோர்ட்டு எதிரொலியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

Update: 2020-05-15 23:15 GMT
நெல்லை, 

கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் கடந்த 7-ந்தேதி திறக்கப்பட்டது. 2 நாட்கள் மட்டுமே கடைகள் திறந்து மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்ற நிலையில் மதுக்கடையை மூடுவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி கடைகளை பூட்டி ‘சீல் வைப்பது மட்டுமல்லாமல், கதவை திறக்க முடியாத அளவுக்கு வெல்டிங் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. உடனடியாக கடைகளின் இரும்பு கதவுகளில் வெல்டிங் எந்திரம் மூலம் வெல்டிங் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் மூலம் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் 96 மதுக்கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 69 கடைகளும் அமைந்துள்ளன. இதில் கொரோனா பாதிப்பு உள்ள பகுதியில் அமைந்திருக்கும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் இன்று திறக்கப்படுகிறது. இதற்காக பூட்டுகளுக்கு வைக்கப்பட்ட ‘சீல்‘ மற்றும் கதவுகளில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங்கை அகற்றுமாறு டாஸ்மாக் நிர்வாகம் நேற்று மாலை உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று மாலை அந்தந்த மதுக்கடைகளுக்கு மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் வந்தனர். அவர்கள் முன்னிலையில், டாஸ்மாக் அதிகாரிகள் மேற்பார்வையில் கடைகளின் பூட்டுகளில் வைக்கப்பட்டிருந்த ‘சீல்‘ அகற்றப்பட்டது. மேலும் கதவை திறக்க முடியாத அளவுக்கு வைக்கப்பட்டிருந்த வெல்டிங், எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இதுதவிர ஏற்கனவே மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நிற்கும் வகையில் கட்டையால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் 6 அடிக்கு ஒரு இடத்தில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால், அவர்களை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் 7 நாட்களுக்கு 7 நிற அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அவையும் நேற்று அந்தந்த மதுக்கடைகளுக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஊழியர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்